நச்சுக் காளான்கள்
உணவுக் காளான்களையும், நச்சுக் காளான்களையும் வேறுபடுத்தச் சரியான முறைகள் இதுவரை கண்டறியப்படவில்லை. பொதுவாக புல்தரை போன்ற இடங்களில் கிடைக்கும் காளான் நல்லதென்றும், குப்பை, அழுகிய கழிவுப்பொருட்கள், துருப்பிடித்த ஆணி போன்றவை,பாம்புப் புற்று, நச்சுக் கனிகளைத் தரும் மரம் ஆகியவற்றுக்கருகில் கிடைக்கும் காளான்கள் நல்லவை அல்ல என்றும் நம்பப்படுகிறது. உணவுக் காளான்கள் மென்மையாகவும், உரிப்பதற்கு எளிதானதாகவும் இருக்கும். தவிர, இவற்றைச் சமைக்கும் போது வெள்ளிக் கரண்டியைப் பயன்படுத்தினால் அது நிறம் மாறாது. மாறாக நச்சுக் காளான்கள் வெள்ளிக் கரண்டியை கருப்பாக மாற்றிவிடும் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். உதாரணமாக அமானிடா பலாய்டஸ் என்னும் நச்சுக் காளான் மென்னையாகவும், உரிப்பதற்கு எளிதாகவும் இருப்பதுடன் இதனைச் சமைக்கும்போது வெள்ளிக் கரண்டி நிறமாற்றம் அடைவதில்லை.
வெண்மையைத் தவிர வேறு நிறங்களில் கிடைக்கும் காளான்கள் நச்சுத் தன்மை உடையவை என்று சிலர் கருதுகின்றனர். இதுவும் தவறாகும். ஏனெனில் சின்ட்ரெல்லா, பொலிடஸ், மோர்ச்செல்லா, சிடேக் போன்ற சுவை மிக்க காளான்கள் நிறமிக்கவை. அமானிடா பலாய்டஸ், அமானிடா வெர்னா, பிளிரோட்டஸ் ஒலியேரியஸ் போன்ற வெண்மை நிறக் காளான்கள் நச்சுத் தன்மை மிக்கவை.
நத்தை, எலி, முயல் போன்றவைகள் கடித்த காளான்கள் நல்லவை என்றும், சந்தேகத்துக்கிடமானவற்றை சிலவகை வளர்ப்பு பிராணிகளுக்குக் கொடுத்து உண்மை நிலை அறியலாம் என்றும் கருதப்படுகிறது. எனினும் நத்தை அமானிடா பலாய்டஸ் என்ற காளான் முயலின் வயிற்றில் சுரக்கும் சிலவகை இரசாயன நச்சுப் பொருட்களை நடுநிலைப்படுத்திவிடும் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. காளான்களின் உருவ அமைப்பு, வெட்டும்போது நிறமாற்றம் அடைதல், விரும்பத்தகாத மணம் மற்றும் சுவை, பாலுடன் கலக்கும் போது திடப் பொருளும் நீரும் தனித்தனியே பிரிதல் போன்றவற்றால் நச்சுக் காளான்களைக் கண்டறியலாம் என்று சிலரால் நம்பப்படுகிறது. உதாரணமாக, அகாரிகஸ் சேன்த்தோடெர்மஸ் என்னும் நச்சுக் காளானைத் தொட்டவுடன், அந்த இடம் வெண்மையிலிருந்து மஞ்சளாகவும், பின் பழுப்பு நிறமாகவும் மாறிவிடும், இதே போல் பொலிடஸ் சாட்டனஸ் எனப்படும் காளான் பசுமை கலந்த நீல நிறமடையும்.
பெரும்பாலும் உணவுக் காளான்களின் தொகுதியாக அமைந்த இனத்தைச் சார்ந்த எல்லாக் காளான்களும் நச்சுத் தன்மையற்றவை என்று கூறுவதற்கில்லை, ஏனெனில் அகாரிகஸ் என்னும் மொட்டுக் காளான் இனத்தில் பைஸ்போரஸ், பைடார்குவிஸ், கேம்பஸ்டிரிஸ், அர்வன்சிஸ் போன்ற சிற்றினங்கள் வியாபார அளவில் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. எனினும் அகாரிகஸ் சேன்த்தோடெர்மஸ்என்னும் காளான் நச்சுத் தன்மையுடையது.
சிப்பிக் காளான் இனத்தில் பிளிரோட்டஸ் ஒலியேரியஸ் நச்சுக் காளானாகும். அமானிடா இனத்தில் ரூபசென்ஸ்,சிசேரியா போன்ற சிற்றினங்கள் மிகச் சிறந்த உணவுக் காளான்கள் ஆகும். கைரோமித்ரா எஸ்குலண்டா போன்ற காளான்கள் உலகின் சில பகுதிகளில் நல்ல காளானாகவும் வேறுபகுதிகளில் நச்சுக்காளானாகவும் கருதப்படுகின்றன. இவ்வினக்காளான்களில் தட்பவெப்ப நிலைக்கேற்ப மாறுபட்ட இரகங்கள் உருவாதலும், நச்சுப்பொருட்களின் அளவில் மாற்றம் ஏற்படுதலும், சமைக்கும் முறைகளில் உள்ள வேறுபாடுகளும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. தவிர, சாப்பிடுபவர்களின் உடல்நிலை, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல் போன்றவற்றாலும் இவ்வகைக் காளான்கள் நச்சாக மாறும்.
கோப்ரைனஸ் (குப்பைக் காளான்), ரைசோபோகான்,ஸ்க்ளிரோடெர்மா, லைக்கோபெர்டான் போன்ற வகைகளில் புதிதான முதிர்ச்சிடையாத மொட்டுக்கள் சாப்பிட உகந்தவை, முதிர்ந்த காளான்கள் நச்சு மிகுந்தவை. குப்பைக் காளானில் சமைத்த உணவுடன் சேர்த்து மது அருந்தினால் நச்சு தன்மையுண்டாகும். சாப்பிட்டவரின் உடல் கருநீல நிறமடையும். கோப்ரைனின் என்னும் நச்சுப் பொருள் இதற்குக் காரணமாகும். சைலோசைப், கிளைட்டோசைப், இனோசைப் மற்றும் அமானிடா மஸ்கேரியா போன்றவை போதை தரும் காளான்களாகும். காளான்களைச் சமைக்கும் போது மஞ்சள் தூள், வினிகர் போன்றவை கலந்தால் நச்சுத் தன்மை இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. எனினும் இதைச் சரியான முறையாகப் பின்பற்றுவது தவறு.
நச்சுக் காளான்களால் உடலில் ஏற்படும் விளைவுகள்
- திசுவறை உயிர்ப்பொருள் (Protoplasm) கெடுதல் மற்றும் திசுக்கள் சிதைந்து விடுதல்.
- நரம்பு மண்டல பாதிப்பு, வலிப்பு மற்றும் முடக்குவாதம் ஏற்படுதல்.
- உணவுக் குழல் மற்றும் குடல்பகுதியில் அரிப்பு ஏற்பட்டுப் புண்ணாகுதல்.
- வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் மயக்கமுண்டாதல்.
- இரத்தத்திலுள்ள நிணநீர் கெடுதல்.
- தோல் அரிப்பு, சதை நார்கள் சேதமடைதல்.
நச்சுத் தன்மையை அகற்றும் வழிகள்
- வாந்தி எடுக்க வைத்துச் சாப்பிட்ட நச்சுக் காளான் உணவை வெளிக் கொணர்தல். இதற்கு ஒரு தேக்கரண்டி கடுகைப் பொடி செய்து வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் உப்பைத் தண்ணீரில் கலந்து கொடுக்கக் கூடாது.
- வாந்தி எடுத்ததும் சோடியம் சல்பேட் அல்லது மெக்னீசியம் சல்பேட் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு கரண்டி அளவுக்கு ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
- அடி வயிறு வலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையை சிறிது பாலில் கலந்து கொடுக்கலாம். அல்லது இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், சிறிதளவு முட்டையின் மஞ்சள் கரு மற்றும் நான்கு தேக்கரண்டி பால் கலந்து கொடுக்கலாம்.
- இரத்தத்துடன் கலந்து விட்ட நச்சுப்பொருளை அகற்ற மருத்துவரின் உதவியுடன் அட்ரோபின் சல்பேட் போன்றவற்றை ஊசி மூலம் செலுத்தலாம்.
- மனநிலை பாதிக்கப்பட்டு சோர்வுடன் இருந்தால், காபி, தேனீர், சோடா மற்றும் குளிர் பானங்களைத் தரலாம்.
|